Virudhunagar Murder 
க்ரைம்

“இன்ஸ்டாகிராம் காதல்… 6 மாதத்தில் கொலை” - மது போதையில் தினமும் நடந்த தகராறு… ரத்த வெள்ளத்தில் மிதந்த மாமியார்!

வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றதாக தெரிகிறது...

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணுடன் பழகியதாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு வாரம் மட்டுமே இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். அப்போது சிவா மதுபோதையில் தினமும் வாசக தேவியிடம் தகராறு செய்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாசக தேவி, கணவரை விட்டு பிரிந்து விருதுநகர் அருகே செவல்பட்டியில் உள்ள தனது தாய் சாந்தியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மதுபோதையில் மாமியார் வீட்டிற்கு சென்ற சிவா, தனது மனைவி வாசக தேவியை சமாதானப்படுத்தி மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வாசக தேவியை தாக்கியதுடன், அவரை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனைப் பார்த்த அவரது தாய் 55 வயதுடைய சாந்தி, மகளை சிவாவுடன் செல்ல விடாமல் தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியையும், அவரது மகன் சாமி முருகன் (32) என்பவரையும் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த சாமி முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாமியாரை கொலை செய்ததாக கூறப்படும் சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு மாமியார் சாந்தி காரணமாக இருப்பதாக சிவா கருதியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கொலை செய்யும் நோக்கத்தில்  கத்தியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் சாந்தியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் சிவா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியை அழைத்துச் செல்ல சென்ற இளைஞர், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்