Admin
க்ரைம்

“என் அக்கா பொண்ணு கிட்ட எப்படி வேணா பேசுவேன்” - வம்பாக தொடங்கிய குடும்ப சண்டை… மகள் கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை!

பலமுறை கூறியும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து பேசி தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு ஆகாஷ் ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் அதே பகுதியில் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

எனவே கணவன் மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஜெயந்தி இளைய மகன் ஆகாஷ் உடன் மங்காபுரத்திலும், ஹரிணி மற்றும் ஹரிஷ் இருவரும் தந்தை உடன் காதி போர்டு காலனியிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வெளியில் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஹரிணி இடம் அவரது தாய் ஜெயந்தியின் தம்பியான செந்தில்குமார் என்பவர் மதுபோதையில் தேவையற்ற வார்த்தைகளை பேசி தகராறு செய்துள்ளார். பலமுறை கூறியும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து பேசி தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

எனவே இதுகுறித்து ஹரிணி தனது தந்தை ராம்குமாரிடம் பேருந்து நிறுத்தத்தில் செந்தில்குமார் தன்னிடம் தேவையற்ற வார்த்தைகளை பேசி தொல்லை செய்ததை தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ராம்குமார் அவரது மச்சானை கண்டித்த நிலையில் அதற்கு செந்தில்குமார் “எனது அக்கா மகளிடம் நான் அப்படித்தான் பேசுவேன்” என கூறி தகராறில் ஈடுபட்டு உள்ளார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக முற்றியுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார், தனது தாய் கோவிந்தம்மாள், மற்றும் சகோதரி இந்திராணி உடன் சேர்ந்து ராம்குமாரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதலை தடுக்க சென்ற ஹரிணிக்கும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் செந்தில்குமார் அவரது தாய் கோவிந்தம்மாள் மற்றும் சகோதரி இந்திராணி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்திற்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பியே அக்கா கணவரை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.