murugan 
க்ரைம்

“மூணு நாள் என்ன பாடு பட்டரோ” - கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டை! கை கால் கட்டிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

ஆடுகள் வாங்க வெளியூர் சென்று இருப்பார் என குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர்.

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(45). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். எனவே  இவர் ஆடுகள் வாங்குவதற்கு, அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.‌ 

இந்நிலையில் முருகன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார் அன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, ஆடுகள் வாங்க வெளியூர் சென்று இருப்பார் என குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர். ஆனால் மூன்று தினங்களாகியும்  முருகன் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன்.அருகில் உள்ள கிராமங்களில் தேடியுள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை முஷ்டகுறிச்சியை சேர்ந்த காசி என்பவர் தனது தோட்டத்தில், தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் எவ்வளவு நீர் உள்ளது என பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் சாக்கு மூட்டை ஒன்று மிதந்து  கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காசி உடனடியாக ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  முதலில் காட்டுப்பன்றி தான் ஏதோ இறந்து கிடக்கிறது, என நினைத்த காசி பின்னர் தான் அது மூட்டை என்பதை உற்று நோக்கியிருக்கிறார். 

காசியின் தோட்டத்திற்கு விரைந்து வந்த ஆவியூர் காவல் நிலைய போலீசார், அந்த சாக்கு மூட்டையில் மனித உடல் இருப்பது போல தெரிய வந்ததால், காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் அந்த சாக்கு மூட்டையை வெளியே எடுத்தனர். 

அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, அதில் காணாமல் போன ஆடு மேய்க்கும் தொழிலாளி, முருகன் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். முருகனை மர்மநபர்கள்‌ அடித்து கொலை செய்து, கை கால்களை இறுக்கி சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் தூக்கி வீசி சென்றுள்ளது, விசாரணையில் தெரியவந்தது. 

முருகன் உடலை கைப்பற்றி ஆவியூர் காவல் நிலைய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி கண்ணன் தலைமையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முருகனை கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்