க்ரைம்

“ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் தாக்கப்பட்டாரா வாலிபர்?” - இரவில் தனியாக இருந்தவரிடம் அத்துமீறல்.. கண்ணீர் விட்டு கதறும் வீடியோ வைரல்!

இந்நிலையில் பாரதிராஜாவை எட்டு பேர் அடங்கிய கும்பல் துரத்தி செல்லும் வீடியோ

Mahalakshmi Somasundaram

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா படுகை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை எட்டு பேர் அடங்கிய கும்பல் தாக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி குடும்பத்தினர் பேசும் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டு வைரல் ஆகியுள்ளது. பெரம்பூர் காவல் சரகம் நல்லாடை ஊராட்சிக்கு உட்பட்ட படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பாரதிராஜா. இவர் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நல்லாடையில் உள்ள ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த எட்டு பேர் அடங்கிய கும்பல் “ஏன்டா இங்கு நிற்கிறார் உனக்கு எந்த ஊர் என்ன ஜாதி” என்று கேட்டு கத்தியை காட்டி மிரட்டியும் கையால் அடித்தும் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

பின்னர் மறைவான பகுதியில் வைத்து ஆடைகளை கலைத்து ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பாரதிராஜா மறுப்பு தெரிவிக்கவே சரமாரியாக அடித்து விட்டு இந்தச் சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிய நிலையில் பாரதிராஜா அந்த கும்பலிடம் இருந்து தப்பி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெரம்பூர் போலீசார் பாரதிராஜாவை தாக்கிய நல்லாடையைச் சேர்ந்த சரண்(26), செந்தமிழ்வாணன், ஐயப்பன், ஹரி, விஸ்வா, நந்தகுமார், சரவணகுமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய எட்டு பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நல்லாடை தோப்பு தெருவை சேர்ந்த சரண் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

இந்நிலையில் பாரதிராஜாவை எட்டு பேர் அடங்கிய கும்பல் துரத்தி செல்லும் வீடியோ பாலியல் தொந்தரவுக்கு (ஓரினச்சேர்க்கை) உள்ளாக்கியதாக குற்றம் சாட்டி இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில் அதை வைரலாகி வருகிறது. மேலும் பாரதிராஜாவை தாக்கி ஆடைகளை களைந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயற்சித்த நிலையில் பாரதிராஜா அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்ததாகவும், இதுகுறித்து பெரம்பூர் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் பேசி பதிவிட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள போலீசார் பாலியல் குற்றம் எதுவும் நடக்கவில்லை எனவும் பாரதிராஜா பெரம்பூர் ஏடிஎம் அருகே உட்கார்ந்திருந்த போது யார் நீ? இங்கே ஏன் உட்கார்ந்து இருக்கிறாய்! என்று இளைஞர்கள் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாரதிராஜாவை தாக்கியுள்ளனர். என்றும் அதை தவிர எந்த விதமான பாலியல் தொந்தரவும் அளிக்கவில்லை என தெரிவித்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.