west bengal gang rape protest  
க்ரைம்

“உடல் முழுவதும் கடித்து.. கூட்டு பாலியல் வன்கொடுமை” - தலையில் ரத்தம் கசிந்து நரக வேதனை அனுபவித்த சிறுமி.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

உயிருடன் இருந்த நிலையிலேயே சிறுமியை குளத்தில் வீசியிருக்கலாம் என்பதும்..

Mahalakshmi Somasundaram

மேற்கு வங்க மாநிலம், பரூய்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர், கடந்த சனிக்கிழமை(ஜூன் 04) மாலை வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சாப்பாடு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அச்சமடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மறுநாள் நடந்த சம்பவம் அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது.

புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே வெளியான முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும், அவரது தலையில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், உடலின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் கடித்த காயங்கள், கீறல்கள் உள்ளிட்ட கொடூரமான காயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததோடு, உயிருடன் இருந்த நிலையிலேயே சிறுமியை குளத்தில் வீசியிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. அவரது நுரையீரல் மற்றும் வயிற்றில் தண்ணீர் இருந்ததால், மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில், இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி உட்பட மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்திற்கு எதிராக பரூய்பூர் பகுதியில் பொதுமக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டயர்களை எரித்து சாலை மறியல், ரயில் மறியல் நடத்தினர். சில இடங்களில் போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஏற்பட்ட மோதலில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அப்பகுதியில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அரசியல் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள், தடயவியல் ஆதாரங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.