க்ரைம்

“எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க” - மனைவியை அரிவாளால் வெட்டி.. மூன்று வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தந்தை!

சில நிமிடங்களிலேயே சிறுவன் நாகராஜின் உடல்நிலை மோசமடைந்து, வாயில் நுரை தள்ளிய...

Mahalakshmi Somasundaram

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிரபாகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்துடன் வசித்து வந்த பிரபாகரனுக்கு, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தினந்தோறும் பிரபாகரன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

நாளுக்கு நாள் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த (ஜூன் 27) தேதி இரவு “எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க” என கேட்டு பிரபாகரன் மனைவி ரூபியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது ரூபியும் எதிர்த்து வாக்குவாதம் செய்யவே மன வருத்தமடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து கடையில் விஷம் வாங்கி வந்த பிரபாகரன் அதனை மூன்று கிளாஸ்களில் ஊற்றி மனைவி மற்றும் மகன்களை குடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபி விஷம் குடிக்க மறுத்த நிலையில் அவரை பிரபகாரன் அரிவாளால் வெட்டியுள்ளார். எனவே பதட்டமடைந்த ரூபி தனக்கு அருகில் இருந்த முதல் மகனை அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதற்கிடையில் பிரபாகரன் கொடுத்த விஷத்தை 3 வயது மகன் நாகராஜ் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஷம் அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுவன் நாகராஜின் உடல்நிலை மோசமடைந்து, வாயில் நுரை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உடனடியாக குழந்தையை பழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பிரபாகரன் குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல திட்டமிட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.