க்ரைம்

சீமான் வழக்கை நிலுவையில் வைத்தது ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Tamil Selvi Selvakumar

நடிகை விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றப் பின்னரும் வழக்கை நிலுவையில் வைத்தது ஏன் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் 2011ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.

திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நடிகை விஜயலட்சுமி வழக்கை திரும்பப் பெற்ற நிலையில் வழக்கை நிலுவையில் வைத்தது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். 

இதுத் தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 26 ஆம் தேதிக்க ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.