தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 25 வயதுடைய மஞ்சு பிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முகமது இத்ரிஸ் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சு பிரியா சட்டப்படிப்பு பயில சென்னை சென்ற நிலையில், முகமது இத்ரிஸை அவரது பெற்றோர் வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் மூன்று மாதங்கள் பணியாற்றிய முகமது இத்ரிஸ், பெற்றோருக்கு தெரியாமல் சென்னை சென்று தனது காதலியை அடிக்கடி சந்தித்து வந்திருக்கிறார்.
பின்னர் இருவரும் வாடகைக்கு வீடு ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடைபெறாத நிலையிலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த விவரம் மஞ்சு பிரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, புளியங்குடி ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முகமது இத்ரிஸ், பக்ரீத்தை முன்னிட்டு தனது பெற்றோர்களை பார்க்க ஊருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு புளியங்குடி வந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் மனைவியுடன் எந்த தொடர்பும் கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மஞ்சு பிரியா, தனது கைக்குழந்தையுடன் சென்னையில் இருந்து புளியங்குடிக்கு சென்றிருக்கிறார். அப்போது தனது கணவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு பிரியா, குழந்தையுடன் கணவரின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்த நிலையில் முகமது இத்ரிஸின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது கணவரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி, வீட்டின் முன்பு கைக்குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் மஞ்சு பிரியா ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியதோடு, மிரட்டி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மஞ்சு பிரியாவை கால்களை பிடித்து வீட்டின் வாசலில் இருந்து வெளியே இழுத்து தள்ள முயன்றதுடன், வீட்டின் கேட் கதவையும் மூட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார், காயமடைந்த மஞ்சு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் குழந்தையுடன் கணவரை பார்க்க சென்ற மனைவியை, கணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கி வெளியேற்ற முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.