க்ரைம்

ஜான் பாண்டியனை விசாரிக்க விரைந்த தனிப்படை..! தொழிலதிபரை கொல்ல கூலிப்படையை ஏவியதாக புகார்..!

கைது செய்யப்படுவாரா ஜான்பாண்டியன்?

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன். இவர தொழிலதிபர் ஒருவரை கொல்ல கூலிப்படையை ஏவியதாக போலீசில் பிடிபட்ட கூலிபடையினர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ள தனிப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர். என்ன நடந்தது?

கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் வசித்து வருபவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா. துருவ் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் இருசக்கர வாகனங்களுக்கு உரிய உதிரி பாகங்கள் மற்றும் தலைகவசம் விற்பனையகத்தை தீபக் அரோரா நட்த்தி வருகிறார். பிரியா அரோராவின் பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு மணியகாரம்பாளையம் பகுதியில் நான்கரை செண்ட் இடத்தை வாங்கி அங்கு இந்த விற்பனையகத்தை நடத்தி வருகிறார் தீபக் அரோரா. இந்த நிலையில், தீபக் அரோராவின் மனைவி பிரியாவுக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருந்ததாகவும் அதனை தீபக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரியா கணவர் தீபக்கை விட்டு பிரிந்து சென்றுள்ளார். 

இந்தப் பிரிவை பயன்படுத்தி, தீபக் தனது பெயரில் வாங்கிய நிலத்தை பிரியா அடைய நினைத்ததாகக் தெரிகிறது. இதனால் அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு பக்கம் தீபக், சொத்துக்கள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் பிரியா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சூழலில் தீபக் தன்னை மிரட்டுவதாக கூறி, கூலிப்படையை தயார் செய்துள்ளார். அவர்கள் பிரியாவின் பெயரில் இருந்த அந்த இடத்தில் தீபக் வைத்திருந்த விற்பனையகத்தை காலி செய்யும் படி தீபக்கை வலியுறுத்தி மிரட்டி வந்திருக்கின்றனர். ஆனால் அதற்கு தீபக் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சிலர் தீபக்கை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தீபக், காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் தீபக்கை தாக்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தான் தங்களை அனுப்பி வைத்ததாக வாக்கு மூலம் அளித்தனர். அதனடிப்படையில், ஜான்பாண்டியனை விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீசார் விரைந்திருக்கின்றனர். விசாரணையில் அவர் மீதான புகார் நிரூபணமானால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தீபக் அரோரா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.