க்ரைம்

வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த பெண் கைது!!

Malaimurasu Seithigal TV

போச்சம்பள்ளி அருகே வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைத்து நாட்டு வெடி குண்டுகள் தயாரித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் கடந்த வாரம் பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்ப்பட்டு அதில் 9 பேர் பலியாகி மேலும் 25க்கும் மேற்ப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், போச்சம்பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில், பெண் ஒருவர் பட்டாசு கடை வைக்க உரிமம் பெற்று, அதனை சட்ட விரோதமாக, குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்திருக்கும் அவரது வீட்டில், வெடி மருந்து பதுக்கி வைத்திருபதாக, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தகவலின்பேரில் ஜம்புகுட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நபர் ஒருவரின் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அங்கு அந்நபரின் மனைவி, பட்டாசு கடை உரிமம் பெற்றிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டின் பின்புறம், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு இல்லாமல் அரசு விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து அவரது வீட்டில் இருந்து 700 நாட்டு பட்டாசுகள், பொட்டாசியம் புளோரைடு உப்பு 9 கிலோ, 500 கிராம் கரி மருந்து ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை, பாரூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தனியாருக்கு சொந்தமான வெடி பொருள் கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்து போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.