நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தேன்மொழி (25). பெண் காவலரான இவர் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கையை கணினியில் பதிவு செய்யும் பணி செய்து வருகிறார். தற்போது தேன்மொழி பள்ளிப்பட்டு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரியும் திருத்தணி நகராட்சி, முருகப்பா நகர் சேர்ந்த ராம்குமார் (32) என்பவர், தேன்மொழி பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது அவரைக் காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். "தனக்கு விருப்பமில்லை" என தேன்மொழி கூறியுள்ளார். ஆனாலும், ராம்குமார் தொடர்ந்து பெண் காவலர் தேன்மொழிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு காதலிக்குமாறு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேன்மொழி தனது மொபட் வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்றுள்ளார். இதனை அறிந்த ராம்குமார் தனது காரில் தேன்மொழியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து, ஆள் நடமட்டுமில்லாத இடத்தில் தேன்மொழியை வழி மறித்து "தன்னைதான் காதலிக்க வேண்டும்" என வற்புறுத்தி உள்ளார். அவரிடமிருந்து தப்பித்த பெண் காவலர் தேன்மொழி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத்திடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பெண் காவலருக்கு 'காதல் தொல்லை' கொடுத்த வழக்கில் கணினி ஆப்ரேட்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருத்தணி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், காவல்துறையில் பணியாற்றும்போது ராம்குமாரின் தந்தை இறந்ததால், கருணை அடிப்படையில் ராம்குமாருக்கு கணினி ஆப்ரேட்டர் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.