திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தில் உள்ள விடுதியில் ரயில்வே பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், அவருடன் தங்கியிருந்த ஆண் ரயில்வே ஊழியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அவரது மனைவி தமிழரசி (43) என்பவர் ரயில்வே துறையில் பணியமர்த்தப்பட்டார்.
இவர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த நாராயணமூர்த்தியின் மகன் யுவராஜ் (44) என்பவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். தமிழரசிக்கும் யுவராஜுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இருவரும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்குச் சென்று, அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக மது அருந்தியதாகவும், பின்னர் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கழிவறைக்குச் சென்ற தமிழரசி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த யுவராஜ், விடுதி காவலாளியின் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தபோது, தமிழரசி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரி மலை காவல்துறையினர், தமிழரசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதலில் தற்கொலை வழக்காக விசாரிக்கப்பட்ட இந்தச் சம்பவம், பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர் யுவராஜை கைது செய்த காவல்துறையினர், தமிழரசியின் உயிரிழப்புக்கான காரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏலகிரி மலை விடுதியில் ரயில்வே பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.