திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்களையாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையன் வயது 50. லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார்.. இவர் தனது மனைவி தனலட்சுமி(39) மற்றும் 15 வயது மகளுடன் எரியோடு அருப்பம்பட்டி அருகே உள்ள முனியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
இந்த தம்பதிகளின் மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதனால் கணவன் மனைவி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பையன் திடீரென்று வீட்டிலிருந்து மாயமானார். அதனைத்தொடர்ந்து தனலட்சுமி தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 26 ஆம் தேதி எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தனலட்சுமி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தனலட்சுமியை பிடித்து துருவித் துருவி விசாரணை நடத்தியதில், சுப்பையனை அடித்து கொலை செய்து தோட்டத்தில் வைத்து உடலை எரித்தது தெரியவந்தது.
மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு சுப்பையன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது. அப்போது சுப்பையன் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி வீட்டில் இருந்து இரும்பு கம்பியால் சுப்பையனை தாக்கியுள்ளார்.
இதில் தலையில் படுகாயமடைந்த சுப்பையன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து தனலட்சுமி சுப்பையனின் உடலை தென்னந்தோப்பில் கிடந்த மட்டையில் போட்டு, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
அதன்பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு தனலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து எரியோடு போலீசார் தனலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவியே கணவனை அடித்துக் கொன்று பெட்ரோல் ஊற்றி உடலை தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.