க்ரைம்

பெண்களின் பாதுகாப்பு இந்த உலகில் மட்டுமல்ல, சொந்த வீட்டிலும் இல்லை...

சித்தியின் புகைப்படம் மற்றும் போன் நம்பரை நண்பர்களுக்கு பகிர்ந்தவர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி | தமிழக - கேரள எல்லைப் பகுதியான ஊரம்பு பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான தேவகுமாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தேவகுமாரியின் வீட்டுக்கு சகோதரி மகன் ராஜேஷ் என்ற இளைஞர் அடிக்கடி வந்துள்ளார்.  

35 வயதான ராஜேஷுக்கு சித்தி உறவு முறையான தேவகுமாரியின் மீது ஒரு கண் இருந்துள்ளது. பல சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து வந்தவர், தனியாக இருப்பதை அறிந்து சித்து விளையாட்டை காட்ட முயற்சித்துள்ளார்.

இதற்கு தேவகுமாரி பிடி கொடுக்காமல் போனதையடுத்து சித்தியின் புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பி வேறு மாதிரியான வேலைகளில் இறங்கியிருக்கிறான் இந்த வஞ்சகன். 

தேவகுமாரியின் புகைப்படங்களை மார்பிங் செய்து அதை நண்பர்களுக்கு அனுப்பி, அவரது போன் நம்பரையும் அனுப்பி தேவையென்றால் பேசிக் கொள்ளலாம். நேரில் சந்திக்கலாம் என பரப்பி வந்துள்ளார்.

ராஜேஷ் இவ்வாறு செய்ததில் இருந்து தேவகுமாரிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து போன் கால்களும், வாட்ஸ்அப்பில் ஆபாச தகவல்களும் வந்ததால் அதிர்ச்சியடைந்தார் தேவகுமாரி. 

இதற்கு சகோரியின் மகன்தான் காரணம் என தெரிந்து போனதையடுத்து தனது சகோதரர்களிடம் கூறி மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கும் அடங்காத ராஜேஷ், சித்தியிடம் சென்று எவ்வாறு தன்னைப் பற்றி மாட்டி விடலாம் என்றும், மொபைல் ஆதாரங்களை தரக் கோரியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் பதறிப்போன தேவகுமாரி கொல்லங்கோடு காவல்நிலையத்தில் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளார். சித்தியை தவறான பெண்ணாக சித்தரித்த ராஜேஷை கன்னியாகுமரி போலீசார் தற்போது வெறிகொண்டு தேடி வருகின்றனர். 

தமிழ்நாட்டின் தென்மூலையில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்க, புதுச்சேரியிலே, கட்டிய கணவனே மனைவியை ஆபாசமாக சித்தரித்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம்  சோலைநகரைச் சேர்ந்த 23 வயதான மணிகண்டன் என்பவருக்கும், முதலியார் பேட்டையைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து சில மாதங்களிலேயே பிரிந்து விவாகரத்தும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் முன்னாள் மனைவியின் பெயரில் இன்ஸ்டாக்ராமில் போலி கணக்கு தொடங்கிய மணிகண்டன், அவரது புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். தன்னை நிராகரித்துச் சென்றதால் ஆத்திரமடைந்தவர், கட்டிய மனைவியின் விவகாரமான புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பரப்பி, அதை பிறரும் ரசிக்கும் எண்ணத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், முன்னாள் கணவன் மணிகண்டனின் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கீர்த்தியின் தலைமையின் கீழ் உள்ள போலீசார், மணிகண்டனை பிடித்து சிறையில் பாசமுடன் கவனி.. கவனி என கவனித்து வருகின்றனர். 

பெண்களிடம் தவறான எண்ணத்துடன் பழகுவதும், அதே பெண் தனக்கு கிடைக்கப் போவதில்லை என தெரிந்தவுடன் அவர் மீது அவதூறு பரப்புவதும், ஆபாசமாக பேசுவதும் பல ஆண்களுக்கு வழக்கமாகவே உள்ளது. நிராகரித்தார் என்ற ஒரே காரணத்துக்காக நியாயமே இல்லாமல் இப்படி கீழ்த்தரமான வேலைகளில் செய்யும் மிஸ்டர் உத்தமர்களை போலீசார் கவனிப்பார்களா?