Yercaud girl body found 
க்ரைம்

“ஏற்காடு புதருக்குள் கிடந்த சிறுமியின் சடலம்” - மலைப்பாதையில் வைத்து கொலையா? தீவிர விசாரணையில் தனிப்படைகள்!

வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததுடன், வனத்துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் புதருக்குள் சிறுமியின் உடல் கிடந்த நிலையில், அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து உடலை வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காடு கொட்டச்சேடு மலை கிராமத்தில் இருந்து குப்பனூர் செல்லும் முக்கிய மலைப்பாதையில் சாலையோரம் தடுப்புச் சுவர் அருகே வியூ பாயிண்ட் போன்ற பகுதி ஒன்று உள்ளது.

இந்நிலையில், நேற்று(நவ 26) காலை அங்கு சுற்றுலா வந்த சிலர் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தின் புதருக்குள் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதையும், அவரது கால்கள் மட்டும் வெளியே தெரிந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாகச் சென்ற உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் சிறுமியின் உடல் கிடந்த இடத்தைப் புகைப்படம் எடுத்து ஏற்காட்டில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததுடன், வனத்துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏற்காடு போலீசார் மற்றும் வனத்துறையினர், பள்ளத்தில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமிக்கு 10 முதல் 13 வயது வரை இருக்கலாம் என்றும், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் நேரில் சென்று சிறுமியின் உடல் கிடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, சேலம் மாவட்ட டி.ஐ.ஜி. தேவராணியும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, போலீசாரிடம் விசாரணையின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் எஸ்.பி.யின் குற்றப்பிரிவு தனிப்படையினர் உள்ளிட்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குப்பனூர் மலைப்பாதையில் உள்ள சுங்கச்சாவடி மற்றும் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுமி மலைப்பாதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அவரைக் கொலை செய்து உடலைப் பள்ளத்தில் வீசிச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஏற்காடு பகுதியில் சிறுமி யாரேனும் காணாமல் போயுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள போலீசார், சிறுமி குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்