திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 52 வயதுடைய யசோதா. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகன் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருவதால் யசோதா தனியாக தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் கடந்த பத்து ஆண்டுகளாக அந்த பகுதிக்கு வந்து, கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் யசோதா வீட்டில் தங்கி வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ல் யசோதா அவருக்கு உணவு வழங்கி உணவு கொடுத்து மகன் போல பராமரித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இதனால் கோபமடைந்த யசோதாவின் மகன் சேட்டு, அந்த இளைஞருக்கு தொடர்ந்து உணவு வழங்க வேண்டாம் என தனது தாயிடம் கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே மகனின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட யசோதா, கடந்த சில நாட்களாக மூர்த்திக்கு உணவு வழங்குவதை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் மூர்த்தி மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை மதுபோதையில் இருந்த மூர்த்தி, யசோதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது “ஏன் எனக்கு உணவு தர மறுக்கிறாய்?” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் தீவிரமடைந்து தகராறாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மூர்த்தி, “எனக்கு சோறு போடாத நீ உயிரோடு இருக்காத சாவு” என கூறி தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் யசோதாவை கழுத்துப் பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஏற்பட்ட பலத்த காயத்தால் யசோதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்துள்ளார். யசோதா உயிரிழந்ததை அறிந்த மூர்த்தி அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுப்பிரமணி என்பவர் உடனடியாக கத்திக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து யசோதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். உணவு வழங்க மறுத்த காரணத்தால் ஏற்பட்ட தகராறு கொலை வரை சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உணவு அளிக்காதது மட்டும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.