திருமணமான இரண்டு வருடத்தில் இளம் பெண் ஜெமீலாவிற்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் வீட்டார் தொடர்ந்து உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாலும், இளம்பெண் தனது தாய் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் தஸ்நேவிஸ் இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களது ஒரே மகள் ஜெமிலா , தஸ் நேவிஸ் ஜெமீலா மூன்று வயது இருக்கும் போதே இறந்துவிட்டதாள், ஜெமீலாவின் தாய் தனது வீட்டில் சிறிய பெட்டிக்கடை வைத்து தனது மகளை பீ.காம் வரை படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் ஜெமீலாவும் தூத்துக்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெனோ என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023 -ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது
திருமணத்தை தொடர்ந்து ஜெமீலா தனது கணவர் பெனோ மற்றும் மாமனார் லீனஸ் மாமியார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார் . இவர்களது வீட்டு அருகே பெனோவின் அக்கா ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் சுதர்சன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். பெனோ மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம் கூறும் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்த நிலையில் ஜெமீலா மற்றும் பெனோ தம்பதிக்கு மூன்று முறை குழந்தை உண்டாகி கருக்கலைப்பு நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜெமீலாவிற்கு திருமணம் ஆகி மூன்று முறை கரு கலைப்பு ஏற்பட்டதாள் தொடர்ந்து பெனோவின் வீட்டார் குழந்தை இல்லாததை குத்திக்காட்டி ஜெமீலாவின் மனம் புன்படும்படி தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது
மேலும் பெனோ தான் வேலை பார்த்த வேலையை விட்டுவிட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு சுமார் 5 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை ஜெமிலாவின் 5 பவுன் நகையை அடகு வைத்து கட்டியுள்ளார் தொடர்ந்து வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெனோ வசித்து வந்த வீட்டை பெனோவின் தந்தை தனது மற்றொரு மகளான புனிதாவிற்கு எழுதி கொடுத்ததால் அவர் வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தை இல்லாத பெனோ மற்றும் ஜெமீலாவிற்கு சொத்தில் பங்கு கிடையாது எனவும் கூறியுள்ளனர்.ஜெமிலாவிற்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி மன உளைச்சல் அளிக்கும் வகையில் கணவர் பெனோவின் குடும்பத்தினர் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் பெனோ தன்னை விட தனது சகோதரிகள் குடும்பத்தினர் மீது அன்பு வைத்ததாகவும் ஜெமீலாவிடம் சரியாக பழகாமல் அவர்கள் குடும்பத்தினர் பேச்சை கேட்டு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு பெரியவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் ஜெமிலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர்கள் அறிவுரைப்படி மூன்று மாதங்கள் கணவன் மனைவி பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறியதால் ஜெமீலா சகாயபுரத்தில் உள்ள தன தாய் வீட்டில் கடந்த சில நாட்களாக வந்து தங்கி உள்ளார். தாய் வீட்டில் தங்கிய ஜெமீலாவை கணவன் பெனோ தனது வீட்டிற்கு தெரியாமல் இரவு நேரங்களில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனவன் விட்டார் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஜெமீலா சகாயபுரத்தில் உள்ள தனது வீட்டில் தாய் ராஜேஸ்வரி உறங்கிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் இன்று அதிகாலை தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட ஜெமீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் ஜெமீலா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான அதிகாரிகள் ஜெமீலாவின் தாய் ராஜேஸ்வரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஜெமீலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக ஜெமீலாவின் கணவர் பெனோ மற்றும் மாமனார் லீனஸ் பெனோவின் சகோதரி ஜெனிட்டா மற்றும் ஜெனிடாவின் கணவர் சுதர்சன் ஆகியோர் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெமீலாவின் தாயார் ராஜேஸ்வரி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக ஜெமீலாவின் கணவர் பெனோவின் உறவினர்கள் கூறுகையில் “இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நன்றாக தான் இருந்து வந்தார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் தற்போது இந்த சம்பவம் எங்கள் வீட்டில் வைத்து நடைபெறவில்லை. ஜெமீலாவின் தாய் வீட்டில் தான் வைத்து நடைபெற்றுள்ளது. அதனால் தங்களுக்கும் ஜெமீலா தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்தனர்
ஜெமீலா தான் எழுதி வைத்துள்ள கடிதத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட “பெனோவுக்கு என்னைவிட அவர் சகோதரிகள் குடும்பம் தான் அவருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கு. இனிமேல் அவருடன் சென்று குடும்பம் நடத்தினாலும் நிம்மதியாக இருக்க முடியாது. உங்களை விட்டுட்டு இப்படி நான் பண்ண கூடாது ஆனால் என்னால் முடியவில்லை அம்மா. கணவர் பெனோவின் வீட்டில் அவர்கள் பண்ணுவது தான் சரி நான் தப்புன்னு சொல்றாங்க. அவங்க என்ன பேசினாலும் நான் கேட்டுகிட்டு இருக்கணும் அப்படின்னு எதிர்பார்க்கிறார்கள். அம்மா நான் திரும்பப் பெனோ வீட்டுக்கு போனாலும் என்னை நிம்மதியாக வாழ விட மாட்டாங்க அம்மா. என்னை மன்னித்துவிடு. நான் உன்னை விட்டு செல்கிறேன். என்னுடைய நகைகளை வாங்கி இருக்கும் கடனை அனைவருக்கும் கொடுத்துவிட்டு நீயும் என்னுடன் வந்துவிடு. நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்” என மனம் உருகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் இளம்பெண் திருமணமான இரண்டு வருடத்தில் கணவன் வீட்டார் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.