க்ரைம்

“தலை நசுக்கப்பட்டு இளைஞர் கொலை!” - வெளிநாட்டில் இருந்து ஆசையாய் வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்! ஒரே மகனை இழந்து கதறும் தாய்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான நெடுவாசலுக்கு வந்துள்ளார்..

Muthu Lakshmi

பெரம்பலூர் அருகே வெளிநாடு சென்று வந்த வாலிபரின்  தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் - தனலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வெற்றிவேல் (30) என்ற ஒரே மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார் வெற்றிவேல். இந்நிலையில் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தின் மூலம் நெடுவாசல் கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார்.

இந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சில தினங்களே உள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான நெடுவாசலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் வெற்றிவேல் கவுல்பாளையம் அருகே மூடப்பட்ட கல்குவாரி அருகேயுள்ள தங்களுக்கு சொந்தமான வயலில் மாடு மேய்ப்பதற்காக காலை 9 மணிக்கு சென்றுள்ளார். மாடு மேய்க்க சென்றவர், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர். 

இந்நிலையில், கவுல்பாளையம் கல்குவாரி பகுதியில் வாலிபர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்த  உறவினர்கள் உயிரிழந்து கிடந்தது வெற்றிவேல் என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்தது குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். கொலை செய்யப்பட்ட வெற்றிவேலுக்கு முன்விரோதம் ஏதுமில்லை என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து வந்தார் என்பதால் அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? என்றும் விசாரணை செய்து வருகின்றர். மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார், கொடூரமான முறையில் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

வெற்றிவேல் சக நண்பர்களுடன் மது அருந்தும் போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? போன்ற கோணங்களில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கள்ளத்தனமாக அதிக அளவில் மது விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை பழக்கத்தினாலேயே இளைஞர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதைத் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்