க்ரைம்

“நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த வாலிபர்கள்” - ‘Gay டேட்டிங்’ ஆப் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி வரவழைக்கப்பட்ட ஆண்.. ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்!

அவருக்காக காத்திருந்தது காதல் சந்திப்பு அல்ல, திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு சதியாக

Muthu Lakshmi

குஜராத்தில் டேட்டிங் செயலி மூலம் பழகிய நபரை ஹனிடிராப் வலையில் சிக்கவைத்து, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொண்டு மர்ம கும்பல் மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலியான ‘போலோ’ (Bolo) செயலியைப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் அறிமுகமான சிலருடன் அவர் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்துள்ளார். அவர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகள், அவரை நேரில் சந்திக்க அழைத்துள்ளனர். சாட்டிங் வந்த அழைப்பை ஏற்று, சுரேந்திரநகர் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு அந்த நபர் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்காக காத்திருந்தது காதல் சந்திப்பு அல்ல, திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு சதியாக இருந்தது.

அந்த இடத்தில் ஏற்கனவே ஏழு பேர் கொண்ட கும்பல் காத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு சென்ற உடனே அந்த நபரைச் சுற்றிவளைத்த மர்ம கும்பல், அவரை தாக்கியதுடன், வலுக்கட்டாயமாக ஆடைகளைக் களைய செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு, அந்த ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, அவரிடமிருந்து ரூ.31,000 ரொக்கத்தை பறித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், சில நாட்கள் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் துணிச்சலுடன் காவல்துறையை அணுகி புகார் அளித்தார். சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். தொழில்நுட்ப ஆதாரங்கள், மொபைல் கண்காணிப்பு மற்றும் உள்ளூர் உளவுத் தகவல்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்ட காவல்துறையினர், சாஹில் சவுகான், சக்தி பாஜிபாரா, பார்கவ் பர்மர், சமீர் கோடியா, ஃபர்தீன் ஷேக், சமீர் திவான் மற்றும் அங்கித் தியாகி ஆகிய ஏழு பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சக்தி பாஜிபாரா ஏற்கனவே இதுபோன்ற தேன் பொறி தொடர்பான இரண்டு முக்கிய வழக்குகளில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி தனிமையில் உள்ள நபர்களை குறிவைத்து, அவர்களை ஒதுக்குப்புறமான இடங்களுக்கு வரவழைத்து மிரட்டி பணம் பறிப்பது இந்தக் கும்பலின் வழக்கமான செயல்முறையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பறிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.31,000 முழுத் தொகையையும் மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்