மாவட்டம்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி - மயக்கம்! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

Malaimurasu Seithigal TV

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டு 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று மதியம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு கூட்டத்திலிருந்து உணவு பரிமாறப்பட்டது. இதனையடுத்து சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு  உடல்நிலை குன்றியதாக தெரிகிறது. மேலும் சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள்  அருகில் உள்ள கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 மாணவர்களில் மூன்று பேருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் 15 மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் மருத்துவமனை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை காவல்துறை டிஎஸ்பி கீர்த்திவாசன், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.