சிவகங்கை மாவட்டம், பணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான வீரபத்திரன். இவரது இரண்டாவது மகனான 25 வயதுடைய பாண்டி என்பவர் ஊரில் தினமும் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், இதனால் நிம்மதி இழந்த பாண்டியன் தந்தை அவரது சொந்த ஊரான சிவகங்கையை விட்டு தாம்பரத்தில் உள்ள ரங்கநாதபுரம் 5,வது தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். மேலும் வீரபத்திரன் தனது மகன் பாண்டியுடன் சேர்ந்து தாம்பரம் பகுதியில் நெய் விற்பனை செய்து கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் (ஜூலை 08) ஆம் தேதி பாண்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், “சிவகங்கை திருபாசெட்டி காவல் நிலையத்திலிருந்து பேசுவதாகவும்,உங்களது இருசக்கர வாகனம் காவல் நிலத்தில் உள்ளது,அதை நீங்கள் வந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
எனவே பாண்டி அன்று இரவே இருசக்கர வாகனத்தை எடுக்க காவல் நிலையம் செல்வதாக தனது தந்தையிடம் கூறிவிட்டு சென்றார். பல நாட்கள் ஆகியும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பாண்டி சொந்த ஊருக்கும் செல்லாமல் தாம்பரத்திற்கும் வராமல் இருந்துள்ளார். இதனால் பாண்டியன் தந்தை சொந்த ஊரில் உள்ள அனைவரிடமும் பாண்டி குறித்து விசாரித்த போது அனைவரும் பாண்டி வரவில்லை என்று கூறியுள்ளனர்.
எனேவ பதட்டமடைந்த வீரபத்திரன் பாண்டியை மீட்டு தருமாறு தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் பாண்டி செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இருப்பினும் தாம்பரம் போலீசார் பல இடங்களில் தேடியும் பாண்டி கிடைக்கவில்லை, அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு பாண்டியின் செல்போனில் சிம் கார்டு போட்டு ஒருவர் பயன்படுத்தி வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பாண்டியன் செல் போனில் வேறொரு சிம் கார்டு போட்டு பயன்படுத்தி வரும் நபர் குறித்து விசாரணை செய்ததோடு டவர் லொகேஷன் பார்த்து விசாரித்து வந்தனர். தகவல்களின் அடிப்படையில் திருச்சி அய்யம்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் “ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது காட்டூர் ரயில் நிலையம் அருகே உடைந்தவாறு செல்போன் மற்றும் 300 ரூபாய் பணம் கீழே இருந்தது அதை எடுத்துப் பார்த்த போது செல்போனின் டிஸ்ப்ளே உடைந்து இருந்ததால் அதை பழுது பார்க்கும் கடையில் கொடுத்து செல்போனை சர்வீஸ் செய்து சிம்கார்ட் போட்டு பயன்படுத்தி வந்ததாக” மணிகண்டன் போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் போலீசார் மணிகண்டனை அழைத்துக் கொண்டு செல்போன் எடுத்த இடத்தில் சென்று அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தபோது பாண்டி தாம்பரத்தில் இருந்து கிளம்பிய போது போட்டிருந்த ஆடைகள் மட்டும் அப்பகுதியில் கிடந்த நிலையில் போலீசார் அதன் அருகே சென்று பார்த்தபோது சட்டைக்குள் எலும்பு துண்டுகள் இருந்துள்ளது இதைக் கண்டு அதிர்ந்து போன போலீசார் அனைத்து எலும்பு துண்டுகளை சேகரித்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர், அதில் எலும்பு கூடுகளாக இருப்பது பாண்டி தான் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாண்டியின் எலும்புகளை அனுப்பி இறந்த பாண்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய தனித்தனியாக இருந்த எலும்புகளை ஒன்றாக்கி இறந்தவரின் உருவம் போல் செய்து தந்தையிடம் ஒப்படைத்தனர்,மகனை கண்டுபிடித்து கொடுக்க கொடுத்த புகாரில் தந்தையிடம் மகனை எலும்பு கூடாக கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் பயணம் செல்லும் போதுகாட்டூர் ரயில் நிலையம் அருகே பாண்டி தவறி விழுந்து உயிரிழந்து பல நாட்கள் ஆனதால் எலும்பு கூடாக மாறினாரா?அல்லது யாராவது அவரை அடித்து கொலை செய்துவிட்டு தண்டவாளம் அருகே வீசி விட்டு சென்றனரா?என்ற கோணத்தில் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர், விசாரணைக்குப் பிறகே முழுமையான உண்மை வெளியே வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.