மதுரவாயல் பகுதியை சேர்ந்த எட்டாம் மகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன்(37). இவரது மனைவி புனிதா(32). கூலித் தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஷர்மி(12) என்ற மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஷர்மி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் அவரது தம்பி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷர்மி அவரது தந்தையை தொடர்புக்கொண்டு, தம்பி சரியாக படிக்கவில்லை. அதனால் அவனை அடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். வேலை முடிந்து முருகன் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் தனி அறையில் ஷர்மி புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷர்மி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் விருகம்பாக்கம் மகளிர் போலீசார், ஷர்மியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் ஷர்மி தனது தம்பி சரியாக படிக்கவில்லை என்று அவனை அடித்ததாகவும், அதனால் தனது தாயார் வந்து தம்பியை அடித்ததற்காக தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் இருந்து வந்ததாகவும், அந்த பயத்தின் காரணமாக ஷர்மி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஷர்மி தனது தாயிடம் செல்போனில் பேசியுள்ளார். அதில் தனக்கு இருக்கும் அறிவிற்கு விருது மற்றும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவரது தாயும் பாராட்டு விழா வைத்து விடலாம் என பேசிய ஆடியோவும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : தந்தை கண் முன்னே மகள் கடத்தல்...! வெளியான சிசிடிவியால் பரபரப்பு..!