மாவட்டம்

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி கோயில் குடமுழுக்கு.....முன்பதிவு ஆரம்பம்.....

Malaimurasu Seithigal TV

உலகப்புகழ் பெற்ற பழநி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இலவச தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.  இதனையொட்டி, கோயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  அந்த வகையில், கோயில் கோபுர கலசங்களான தங்க விமானம், ராஜகோபுரம், வடக்கு, தெற்கு கோபுர விமானங்கள் என 50 கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு, நவதானியங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றுடன் கோபுரங்களில் பொருத்தும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளதால், பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இந்நிலையில், விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.  இதற்காக, பிரத்யேக இணையதளத்தில் இன்று முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்கு ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளித்து முன்பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

21-ந்தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு, 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் மின்னஞ்சல் வழியாகவும், செல்போனில் குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்