மாவட்டம்

குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள்!

Malaimurasu Seithigal TV

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள் வந்திறங்கியதை பார்த்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பணியாளர்கள் சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். 

மேலும் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படும் நிலையில், நேற்று மதியம் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி லாரியில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாமர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை  சுத்தம் செய்யப்படாத குப்பை லாரியில், எடுத்துவந்த இந்த நிகழ்வு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொது மக்களை முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்தது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது  துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம் , சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.