மாவட்டம்

நெல் கொள்முதலுக்கு லஞ்சம்: சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்!

Malaimurasu Seithigal TV

அரசின் நேரடி  நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 100, ரூபாய் லஞ்சம் வாங்கும் தி.மு.க ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது மகனை கண்டித்து சமூக ஆர்வலர் சென்னை கோட்டையை நோக்கி சைக்கிளில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஐயனேரி பஞ்சாயத்தில் வசிப்பவர் எஸ்.ரஜினி. இவர் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஊழல் நடைபெறுவதை கண்டித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மூலம் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் கோபிநாத் மற்றும் ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி அவரது மகன் வினோத் ஆகியோர்  இணைந்து ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டை ரஜினி முன்வைத்துள்ளார்.

ஆனால் அந்த ஆர்ப்பாட்டம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து ரஜினியை தி.மு.க ஒன்றிய செயலாளர் மகன் வினோத் மற்றும் ஆறு பேர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரஜினி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆர்.கே .பேட்டை காவல் நிலையத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பழனி மகன் வினோத் மற்றும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார், தி.மு.க ஒன்றிய செயலாளர் மகன்  வினோத் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யவில்லை. மேலும், நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள கோபிநாத் அந்த அரசு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் லஞ்சம் வாங்குவதை தட்டிக்கேட்ட சமூக அலுவலர் ரஜினி தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்னை கோட்டையை நோக்கி 150 கிலோமீட்டர் சைக்கிளில் தேசியக் கொடியுடன் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

சமூக ஆர்வலர் ரஜினி, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளிக்க செல்வதாக தெரிவித்துள்ளார்.