சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியில் உள்ள மூன்றாவது தெருவை சேர்ந்தவர் 38வயதுடைய உதயசங்கர். இவருக்கு திருமணமாகி நிஷாந்தி என்ற மனைவியும் 16 வயதில் திரூஸ் என்ற மகனும் ஹர்ஷிதா என்ற மகளும்உள்ளனர். திருஸ் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இவர் சிலம்பம் கராத்தே உள்ளிட்ட கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். உதயசங்கர் மனைவி நிஷாந்தி கடந்த சில ஆண்டுகளாகவே ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த (அக் 24) ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்று முதல் அவரது மகன் திரூஸ் அடிக்கடி தனது தந்தையிடம் தனது அம்மாவை பார்க்க வேண்டும் எனக் கூறியும் “அம்மா இல்லாம வாழவே பிடிக்கல” எனவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவரது தந்தை அவ்வப்போது தனது மகன் மற்றும் மகளை சமாதானம் சொல்லி தேற்றி வந்திருக்கிறார். திரூஸ் மற்றும் அவரது தங்கை வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு டியூஷன் சென்டரில் படித்து வந்த நிலையில் எப்பொதும் இருவரும் ஒன்றாக டியூஷன் சென்று மீண்டும் ஒன்றாக வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஹர்ஷிதா தனது அண்ணனை டியூஷன் செல்ல அழைத்த போது வீட்டிலிருந்த தீரூஸ் டியூஷனுக்கு வரவில்லை என கூறி தனது தங்கை ஷர்ஷிதாவை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். அப்போது தந்தை வெளியில் சென்ற நிலையில் தீரூஸ் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. டியூஷனுக்கு சென்று வீடு திரும்பிய ஹர்ஷிதா இரவு 9 மணிக்கு வந்து கதவை தட்டிய போது அவரது அண்ணன் கதவைத் திறக்கவில்லை வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஹர்ஷிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தீரூஸ் தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரது தந்தை உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் திரூஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.