மாவட்டம்

உலகை பார்ப்பதற்கு முன்பே உயிரிழந்த சிசு... மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்...

மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நாகப்பட்டினம் | வேதாரண்யத்தை அடுத்த பன்னால் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவரது மனைவி திருமுகப்பிரியா கடந்த நான்கு நாட்களுக்கு முன் தலை பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குழந்தைக்கு தொப்புள் கொடி சுத்தி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக முறையான சிகிச்சை அளிக்காமல் அறுவை சிகிச்சைக்கு தாமதப்படுத்தியுள்ளனர்.

மேலும் சிகிச்சையில் இருந்த திருமுகபிரியாவிற்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டு பணிக்குடம் உடைந்துள்ளது. இதனைக் கண்டு கொள்ளாமல் மருத்துவர்கள் சுகப்பிரசவம் ஆகும் என உறவினர்களும் தெரிவித்து அலட்சியம் காட்டியுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் திருமுகப்பிரியாவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

இதில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே குழந்தை இறந்ததாக கூறி மருத்துவர் அக்சயா என்பவர் மீது வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை வீரசேகரன் புகார் அளித்தார்.

மேலும் மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போலீசார் பிரிக்கப்பட்டு பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசவத்தின் போது குழந்தை இருந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.