மாவட்டம்

கல்லூரி மாணவர்கள் - வட மாநிலத் தொழிலாளர்கள் இடையே மோதல் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Malaimurasu Seithigal TV

 உருட்டு கட்டையால் தாக்கும் காட்சி 

கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமாக உணவு கேட்டதால் அடி உதை

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள் அசைவ உணவு அதிகமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மறுக்க இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் விறகுக்காக பயன்படுத்தப்படும் கட்டைகளை எடுத்துக்கொண்டு இருதரப்பும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவிகள் அதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் இரு தரப்பையும் சமாதானமும் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி வளாகத்தில் விசாரணையும் தற்போது முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் திரைப்பட சண்டை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களை தாக்கும் வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.