மாவட்டம்

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் மோதல்... புகார் அளித்த மாணவன்!!

சென்னையில் கல்லூரி மாணவனை  அழைத்து சென்று  தாக்கிய விவகாரத்தில் 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான்(19).  இவர் ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

கல்லூரி மாணவர்கள் மோதல்:

நேற்று கல்லூரி முடிந்த பின்பு ரிஸ்வான் தனது நண்பர்களுடன் 25ஜி  பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது பேருந்தானது கோடம்பாக்கம் ஹைரோட்டில் உள்ள பாம்கிரோவ் பேருந்து நிலையம் சென்ற போது, மாநில கல்லூரியை சேர்ந்த 25 மாணவர்கள் பேருந்தில் ஏறி கூச்சலிட்டு கொண்டே வந்துள்ளனர்.  பின்னர் அவர்கள் பேருந்தில் பயணித்த நியூ கல்லூரி மாணவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த ஐடி கார்டை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

மிரட்டல்:

அதன் பிறகு ரிஸ்வானை மட்டும் மிரட்டி பேருந்தை விட்டு கீழே இறக்கி கொண்டு, அவரை பல பேருந்துகளில்  அழைத்து சென்று சுற்றவிட்டு போரூர் பகுதிக்கு அழைத்து சென்று, பின்னர் ரிஸ்வானை அவர்கள் தாக்கி மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். 

புகார் அளித்த மாணவன்:

இது குறித்து ரிஸ்வான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை வைத்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

கைது:

இந்நிலையில் நியூ கல்லூரி மாணவனை தாக்கிய 9 மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் வடபழனியை சேர்ந்த முகமது முஸ்தபா, அருண், கீர்த்தன், தனுஷ் உட்பட 9 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.