Admin
மாவட்டம்

“இப்போ தர முடியுமா முடியாதா” - டிசி கேட்டு கல்லூரி பேராசிரியரை தாக்க முயன்ற மாணவன்.. தடுத்த உடற்கல்வி ஆசிரியருக்கு பலத்த காயம்!

இதனை பார்த்த அங்கு நின்றிருந்த உடற்கல்வி பிரிவு கெளரவ பேராசிரியர் பூபதி ராஜன் என்பவர் ஒரு கல்லூரி பேராசிரியரை அப்படிப் பேசக்கூடாது

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் முதல்வர் இல்லாத நிலையில் தமிழ் துறை தலைவர் பேராசிரியை சந்தனமாரி என்பவர் பொறுப்பு முதல்வராக இருந்து கல்லூரியை வழி நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கல்லூரியில்   மண்ணியல் துறையில் பயின்று இடையில் நின்ற கூசாலிபட்டியை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர், தனக்கு படிக்க விருப்பமில்லாததால் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் (TC) வேண்டும் என்று கேட்டுள்ளார். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாகவும் எனவே தற்போது தர முடியாது என்றும் நிலுவை தொகையை செலுத்திவிட்டு மாற்று சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறும் கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் சந்தனமாரி கூறியுள்ளார்.

அப்போது பேராசிரியரிடம் மனோஜ் “இப்போ தர முடியுமா முடியாதா” என கேட்டு  வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.  இதனை பார்த்த அங்கு நின்றிருந்த உடற்கல்வி பிரிவு கெளரவ பேராசிரியர் பூபதி ராஜன் என்பவர் “ஒரு கல்லூரி பேராசிரியரை அப்படிப் பேசக்கூடாது” என்று மனோஜை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் அங்கிருந்த இரும்பு டேபிளை எடுத்து சந்தனமாரி மீது வீச முயன்றுள்ளார். 

இதை கவனித்து பூபதிராஜன் தடுக்க முயன்ற போது அந்த இரும்பு மேசை பூபதி ராஜன் கையில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மாணவர் மனோஜை பிடித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூபதி ராஜனை செய்தியாளர்கள் படம் எடுக்க முயன்ற போது , அங்கு நின்றிருந்த சிலர் செய்தியாளர்கள் படம் எடுக்கக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கல்லூரியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.