நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே மீனம்பநல்லூரை சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவர் நாகப்பட்டினம் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேர்முக எழுத்தராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புரத்தினம், அலுவலகத்திற்கு செல்ல நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி, அவரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சுப்புரத்தினத்தை தகாத வார்த்தைகளால் திட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக வேளாங்கண்ணியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி தட்சிணாமூர்த்தி என்பவரை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.