மாவட்டம்

மனைவிக்கு ஃபீஸ் கட்ட வந்த கணவருக்கு நேர்ந்த கொடுமை...!

Malaimurasu Seithigal TV

சேலம் மாநகர், பொன்னம்மாப்பேட்டை  பகுதியை சேர்ந்தவர் ஜீவா(21). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி சினேகா. சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மனைவிக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்காக  ஜீவா, நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஜீவா, தலையில் தொப்பி அணிந்திருந்ததால் அதனை கழட்டுமாறு , நுழைவாயிலில் உள்ள காவலாளி கூறியுள்ளார். அதற்கு ஜீவா, தலைமுடி அதிகமாக உள்ளது எனவே கழற்ற முடியாது என்று பதில் அளித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த கல்லூரியின் தாளாளர்  ராஜேந்திர பிரசாத், ஜீவாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன்,  அடித்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த  ஜீவா, தாளாளர் ராஜேந்திர பிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட கல்லூரி ஊழியர்கள் ஜீவாவை இழுத்துச் சென்று, அறை ஒன்றில் அடைத்து   தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார், விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, காவல்துறையினர் முன்னிலையிலும்  ஜீவாவை அவர்கள்  தாக்கியதாக தகவல் வெளியானது.

இதில் ஜீவாவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதனை அடுத்து ஜீவாவை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜீவா அளித்த புகாரின் பேரில் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அவருடைய தம்பி மகன், கல்லூரி ஊழியர் ஒருவர் என  மூன்று  3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். ஜீவா தரப்பினர் தாக்கியதில் தனியார் கல்லூரியின் அலுவலக உதவியாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.