மாவட்டம்

பொங்கலுக்கு புதிய பேருந்து நிலையங்கள்... கலைகட்டும் கடலூர்...

கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளும் திட்டப்பணிகள் மற்றும் மாவட்டத்திற்கு தேவையான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,கடலூர் மாநகராட்சி மற்றும் விருதாச்சலத்தில் புதிய பேருந்து நிலையம் பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி அதிகாரிகள் வரி வசூல் மற்றும் வருவாய் குறித்து எந்த இடத்தில் தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.கடலூர் மாநகராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் வகையில் நீர் ஆதாரம் கிடைக்கும் பகுதிகளை கண்டறிந்து அதற்கான திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், கடலூர் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு 40 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பாதை வழங்குவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.