மாவட்டம்

குறைந்தது பருவமழை.. தொடங்கியது கடும் பனி.. கோவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்து உள்ள நிலையில் உள் மாவட்டங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பனிமூட்டமும் காணப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிகாலை வேலைகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் கோவை புற வழி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே பயணித்து வருகின்றனர்.

கோவை நீலாம்பூர், கருமத்தம்பட்டி, கனியூர், தென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி வரையிலும் பனி மூட்டம் காணப்படுகிறதாலும், மேலும் கடும் குளிர் நிலவுவதால் அதிகாலை வேலைகளில் பணிகளுக்கு செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர்.

காலை 9 மணி வரையிலும் கூட பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோர் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி வருகிறது.

இந்த குளிர் அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆதரவற்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், இரவில் வெளியே செல்வோர் கம்பளி ஆடைகளை அணிந்தபடி வெளியே செல்ல வேண்டும் எனவும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.