ஈரோடு மாவட்டம், ஜெகநாதபுரம் காலணி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமாரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு ஒன்றாம் வகுப்பு படித்து வரும் சஞ்சய் என்ற 6- வயது மகனும், இரண்டாம் வகுப்பு படித்து வரும் சத்திய பிரியா என்ற 7- வயது பெண் குழந்தையும், மற்றும் மழலையர் பள்ளியில் படித்து வரும் சஞ்சனா என்ற 4- வயது மகளும் உள்ளனர்.
இன்று இரண்டாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கு விடுப்பு எடுத்த நிலையில் வீட்டில் இருந்துள்ளனர். கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்க வேண்டும். எனவே நான்கு வயது மகள் செல்லும் அங்கன்வாடியில் உள்ள ஆசிரியரிடம் பேசி சந்திரகுமாரி மூன்று குழந்தைகளையும் அங்கன்வாடியில் சென்று விட்டு விட்டு ஐவரும் அவரது கணவரும் வேலைக்கு சென்றிருக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஓட்டியே சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து வரும் பெரும்பள்ளம் ஓடையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அவ்வாறு சஞ்சய், சஞ்சனா, சத்தியப்பிரியா ஆகிய மூவரும் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்து ஓடைக்கு சென்றுள்ளனர். பின்னர் சஞ்சனா மற்றும் சத்தியப்பிரியா அங்கன்வாடி மையத்திற்கு சென்ற நிலையில் மூவரில் சஞ்சய் நீண்ட நேரமாகியும் சத்துணவு மையத்திற்கு செல்லவில்லை .
இதனால் பதட்டமடைந்த அங்கன்வாடியின் பொறுப்பாளர் சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து,சஞ்சய் ஓடையில் இறங்கியதாக அவரது தங்கையான 4- வயது சஞ்சனா தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறையினருக்கும் சூரம்பட்டி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணிநேரமாக காணாமல் போன 6- வயதுடைய சஞ்சயை தேடி வந்ததை அடுத்து சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சஞ்சய் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்