pumpkin farmer Admin
மாவட்டம்

விதைகள் மாறிப்போனதால் விவசாயி வேதனை

விதைகள் மாறிப்போனதால் உழைப்பு பணமும் வீணாகிபோனதாக கண்ணீர் விடும் விவசாயின் நிலை குறித்து இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்

மாலை முரசு செய்தி குழு

திண்டிவனம் அடுத்த ஊரல் பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமரன் ஆண்டு தோறும் கல்யாண பூசணிக்காய் பயிர் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த ஆண்டு கல்யாண பூசணி பயிர் செய்து குடும்பத்திற்கான வருமானத்தையும் குழந்தைகள் படிப்பு செலவுக்கான தொகையும் பெறலாம் என்ற எண்ணத்தில் தனது விவசாய நிலத்தை உழுததுடன், கடன் பெற்று விதைகள் வாங்க சென்றுள்ளார்.

திண்டிவனம் பகுதியில் உள்ள அன்னை அக்ரோ சென்டர் என்ற விதை விற்பனைக் கடையில் குண்டு கல்யாண பூசணி விதை வேண்டும் என கேட்டு வாங்கி வந்து நம்பிக்கையுடன் பயிர் செய்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பல்வேறு குடும்ப கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாய நிலத்தை தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்த நிலையில் கல்யாண பூசணிக்காய்க்கு பதிலாக நீட்டு கல்யாணி பூசணி வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வேதனையுடன் விதை நிறுவனத்தை அனுகி முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து விதைகள் மாறிப்போனதாக கூறிய விற்பனை நிலையத்தை சேர்ந்தவர்கள் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு அளிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அதனை தராமல் ஏமாற்றியதோடு மிரட்டியதாவும் கூறப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் தோட்டக்கலை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காலதாமதாமாக புகார் அளித்ததால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என கைவிரித்துள்ளனர்.

இந்நிலையில் கல்யாண பூசணிக்காய் வாங்குவதற்காக நிலத்திற்கு வந்த வியாபாரிகள் குண்டு கல்யாண பூசணிக்காய்க்கு பதிலாக நீட்டு கல்யாண பூசணி விளைந்திருப்பதைக்கண்டு தங்களுக்கு வேண்டாம் எனக் கூறியதால் விளைந்துள்ள அனைத்து காய்களும் விளைநிலங்களில் அழுகி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு என்னதான் விடை என தெரியாமல், காய்கள் அழுகி, காய்ந்து கிடக்கும் விவசாய நிலத்தை கண்டு குமரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று சுற்றி வருவது காண்போரை கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் விதைகளை தவறாக விற்பனை செய்து வரும் தாயாரிப்பு நிலையத்தின் மீதும் விற்பனையகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

கால நிலை மாற்றத்தால் கடும் பொருளாதார நஷ்டங்களை சந்தித்து வரும் விவசாயிகள் இது போன்ற தவறுதலான விதைகள், உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களாலும் ஏமாற்றத்தை சந்தித்து வருவது வேதனைக்குரிய தொடர்கதையாகவே நீள்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்