மாவட்டம்

பெண் வார்டு உறுப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா...

இரணியல் பேரூராட்சியின் பாஜக தலைவரை எதிர்த்து வார்டு பாஜக பெண் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி | நாகர்கோவில் அருகே உள்ள இரணியல் இரண்டாம் நிலை பேரூராட்சியின் பத்தாவது வார்டு உறுப்பினர் கீதா இன்று காலை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறும் போது " தனது வார்டு பகுதியில் என்ன பணிகள் நடைபெறுகிறது? யார் பணிகளை மேற்கொள்கிறார்கள்? எவ்வளவு மதிப்பீடு? என்பது போன்ற எந்த விபரங்களும் தனக்கு தெரிவிக்கப்படுவதில்லை. வார்டின் குப்பைகள் கூட அள்ளப்படுவதில்லை. வாக்காளர்கள் மத்தியில் தனது மரியாதையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பஞ்சாயத்து தலைவர் ஶ்ரீகலா மற்றும் அவரது கணவர் முருகன் செயல்படுவதாக கூறினார்.

மேலும், தன்னை அச்சுறுத்தும் வகையில் நடப்பதாகவும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தனது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், மரியாதை இல்லாத பதவி தனக்கு தேவையில்லை என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை
தொடர்ந்து அவர் அங்கிருந்து கலைந்து சென்றார். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.