கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள புதுப்பாலப்பட்டு -தெத்துக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரன் இவருக்கும், தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே, பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கணவன் மீது இருந்த கோபத்தில் மனைவி சிவசங்கரி, கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்நிலையில் கணவன் ஈஸ்வரன் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர நேரில் சென்று அழைத்துள்ளார்.
அப்போது மனைவி, சிவசங்கரி எனது பெயரில் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி கொடுத்தால் தான், உன்னோடு வாழ்வேன் என திட்டவட்டமாக கூறியதாகவும் அதற்கு கணவன் ஈஸ்வரன் நமக்கு குழந்தை பிறந்தவுடன் எல்லா சொத்தையும் குழந்தை பேரில் எழுதி வைக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனது பெயரில் கணவர் ஈஸ்வரன் சொத்து எழுதி வைக்கவில்லை, என ஆத்திரத்தில் மனைவி சங்கரி உறவினர்கள் மற்றும் அடியாட்களுடன் ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்று, ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி அவர் குடியிருந்த வீட்டையும் அடித்து உடைத்து சூறையாடி உள்ளார்.
இந்நிலையில் ஈஸ்வரனின் அண்ணன் மகன் அரவிந்தன், வீட்டில் ஆட்டுப்பட்டியில் பதுங்கிக் கொண்டு தனது அப்பா திருமுருகனிடம், “அப்பா சித்தப்பாவையும் நம்ம வீட்டையும் அடித்து நொறுக்குகிறார்கள் உடனடியாக வாங்க அப்பா” என கண்ணீர் சிந்திய படியே, கதறி அழுது தன் தந்தையிடம் பேசிய ஆடியோ வெளியாகி, கேட்போரின் மனதை கடும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனைவி தனது பெயரில் சொத்துக்களை எழுதி வைக்கவில்லை என அடியாட்களுடன் சென்று, கணவனை சரமாரியாக தாக்கி வீட்டை அடித்து சூறையாடிய சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்