காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் 31 வயதான உத்தரகுமார். இவர் மீது கொலை வழக்கு உட்பட 6 வழக்குகள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட உத்தர குமார், கடந்த சில ஆண்டுகளாக குற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் வழக்குகளில் சிக்காமல் திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே உத்திரகுமார் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த, சிறப்பு பிரிவு போலீசார் கஞ்சா விற்பனை மேற்கொண்டதாக உத்தர குமாரை அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, உத்தர குமார் காவல் நிலையத்தில் “திருந்தி வாழ நினைத்தால் விடமாட்டீங்களா” என கேட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்தாண்டும் கஞ்சா வைத்திருந்ததாக பொய்யாக வழக்கு பதிவு செய்ததாகவும் உத்தரகுமார் போலீசார் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உத்தரகுமார் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பேசிய உத்தர குமார் “உத்திரமேரூர் காவல் நிலையத்தில் என் மீது வழக்கு இருப்பது உண்மைதான். நான் தற்பொழுது திருந்தி வாழ்ந்து வருகிறேன். என் மீது இருக்கும் வழக்குகளுக்கு, நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். இரண்டு மூன்று வருடங்களாக திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் மீது கடந்தாண்டும் போலியாக கஞ்சா வழக்கு போட்டார்கள், அதே போன்று இந்த ஆண்டு செய்கிறார்கள். எனக்கு திருந்தி வாழும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய உத்தரகுமார் தாய் மைதிலி, “நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இப்போது என் மகன் மீது கேஸ் போட்டு இருக்கிறார்கள். உத்திரமேரூர் இருந்தால் தான் கேஸ் போடுவார்கள், என்றுதான் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து திருந்தி வாழலாம் என்றால், அங்கு வந்தும் பொய் வழக்கு போடுகிறார்கள். காவல்துறையிடம் இதுகுறித்து கேட்டால், மாற்றி மாற்றி பேசுகிறார்கள். காவல்துறையினர் செய்த டார்ச்சர் காரணமாக, மருந்து குடித்து விட்டான் என் மகன். என் மகன் செத்தாலும் பரவாயில்லை ஆனால் பொய் கேஸ் போடுவதை காவல்துறை நிறுத்த வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.