மாவட்டம்

“காதலிக்கு செய்த வீடியோ கால்” - பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தும் நடக்காத திருமணம்.. மிரட்டுவதாக நினைத்து காதலன் விபரீதம்!

காதலியை விளையாட்டாக மிரட்ட நினைத்த ஜெய்சங்கர் தனது வீட்டின்..

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தூத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் துப்புரவாளராக பணிபுரிந்து வருகிறார். ஜெய்குமாருக்கு அதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ள நிலையில் இவர்களது மூத்த மகனான 23 வயதுடைய ஜெய்சங்கரன் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு முதுகலை மேல்படிப்புக்காக காத்திருந்து வந்துள்ளார்.

ஜெய்சங்கரன் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலை குறித்து அறிந்த இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே ஜெய்சங்கரன் தனது காதலியுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெய்சங்கரன் தனது காதலியிடம் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் காதலியை விளையாட்டாக மிரட்ட நினைத்த ஜெய்சங்கர் தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் கழுத்தில் போர்வையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக கழுத்தில் போர்வை இறுக்கி உயிருக்கு போராடி உள்ளார்.

சத்தம் கேட்டு ஜெய்சங்கரின் தாய் ஓடிச்சென்று கதவை திறக்க முயன்ற போது அவரால் முடியாமல் போக, ஜெய்சங்கரன் தாய் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயசங்கர் பரிதாபமாக உயிரிழந்து இருந்துள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெய்சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.