மாவட்டம்

குழந்தை பிறந்து உயிரிழந்த தாய்... மருத்துவர்கள் அலட்சியம் என கதறும் குடும்பம்...

பிரசவத்தின் போது கர்ப்பிணி தாய் உயிரிழந்த நிலையில், அவர் வயிற்றி இருந்த குழந்தையை பத்திரமாக மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கர்நாடகா | மாலூர் தாலுக்கா பெனிகட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முனிராஜ், இவரது மனைவி அஸ்வினி (23) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை அவரது பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடத்தி தங்களது சொந்த ஊரான ஓசூர் அருகே உள்ள கூஸ்தனப்பள்ளி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அஸ்வினி கடந்த 10 நாட்களாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு டிசம்பர் 22ஆம் தேதி குழந்தை பெற்றெடுப்பதற்கான பிரசவ தேதி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அஸ்வினி உடல் நிலை கோளாறு காரணமாக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பிரசவிக்கலாம் எனக்கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அப்போது அஸ்வினிக்கு மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய அவருக்கு இரத்த உயர் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரோடு இருந்ததால் மருத்துவர்கள் 5 நிமிடத்தில் அஸ்வினிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை உயிரோடு காப்பாற்றினர். இதனையடுத்து அந்த பச்சிளம் குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஸ்வினியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்ன அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  அஸ்வினிக்கு ஊசி செலுத்திய சிறிது நேரத்திலே அவர் மயங்கி விழுந்தார்.  அவருக்கு அதே இடத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர் என குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் ஓசூர் நகர காவல் நிலையத்தில் மருத்துவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் மற்றும் சுகாதார துணை இயக்குனரிடம் புகார் சென்ற நிலையில் அவரது உத்தரவின் பேரில் கர்ப்பிணி தாய் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.