மாவட்டம்

பழமுதிர்சோலையில் 2 கோடி ரூபாய்க்கு புது கதவுகள்...

முருகன் கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெள்ளிகதவுகள் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் பொருத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

மதுரை | மேலூர் அருகே அழகர்மலையின் மேலே உள்ள  முருகனின் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலை எனும் சோலைமலை முருகன் கோயிலில் உபயதாரர்கள் மூலம் 250 கிலோ வெள்ளியால் ஆன நிலை கதவுகள் மற்றும் வெள்ளி படிகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோயிலில் உள்ள சஷ்டி மண்டபத்தில் நடை பெற்ற பணிகளை கடந்த டிசம்பர் 11ம் தேதி அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் பி மூர்த்தி உடனிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்திலுள்ள மூலவரான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதி, வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதி உள்ளிட்ட 3 சன்னதிகளில் நிலைகதவுகளில் 135 கிலோ எடை கொண்ட வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டு  இன்று  சாத்துப்படி  விழா நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி கலசம் சுமந்து ஆலயத்தில் வலம் வரப்பட்டு நிலைகதவுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில் திருக்கோயில் துணை ஆணையர் ராமசாமி, உபயதாரர் சுப்பையா செட்டியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வெள்ளி கதவு பொருத்தும் விழாவை யொட்டி பெண் பக்தர்கள் கும்மி கொட்டியும், முருகனைப் பெருமைப் படுத்தும் விதமாக கந்த சஷ்டி புராணங்களை வாசித்து மகிழ்ந்தனர்.