மாவட்டம்

போதைப்  பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக நூதன பிரச்சாரம்...அசத்திய மாணவர்கள்.. 

Malaimurasu Seithigal TV

சிதம்பரம் அருகே கடலில் ஓடும் படகில் 2 மணி நேரம் 10 நிமிடம் இரு கைகளாலும் சிலம்பம் விளையாடி பள்ளி மாணவ, மாணவி சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

 சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன்சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கே.ஏ. அதியமான். 12 வயது நிரம்பிய இவர் அந்த ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது சகோதரி கே.ஏ. ஆதிஸ்ரீ அதே ஊரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தனது தந்தை வைத்தி. கார்த்திகேயன் நடத்தும் சிலம்ப பயிற்சி பள்ளியில் சேர்ந்து சிலம்பம் கற்று விளையாடி பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாணவர் அதியமான், மாணவி ஆதிஸ்ரீ இருவரும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக சிலம்பம் விளையாடி சாதனை புரிந்துள்ளனர்.

தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் உள்ள கடலில் இருந்து சிறிய இஞ்சின் படகில் ஏறிக்கொண்ட அதியமானும், ஆதிஸ்ரீயும் தங்களது இரண்டு கைகளாலும் சிலம்பம் சுற்றியவாறு கடலில் படகில் சென்றனர். ஓடும் படகில் இருவரும் தங்களது இரண்டு கைகளாலும் தொடர்ச்சியாக 2 மணி நேரம் 10 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். இவர்களது சாதனையை "ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்" என்ற அமைப்பு பாராட்டி பரிசுகளை வழங்கியது.

இதையடுத்து மாணவர்கள் படிக்கும் தாண்டவராயன் சோழகன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மாணவர்கள் இருவரும் பங்கேற்று தாங்கள் எப்படி சிலம்பம் சுற்றினோம் என்பதை சிறிது நேரம் பள்ளி மாணவர்களுக்கு சுற்றி காண்பித்தனர். 

இதைத்தொடர்ந்து மாணவர்களின் சாதனைகளை பாராட்டி அவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் உள்ளிட்ட நினைவு பரிசுகளை வழங்கியும் பாராட்டினர். இந்த சாதனை குறித்து மாணவர்களின் தந்தையும், சிலம்ப பள்ளி ஆசிரியருமான வைத்தி கார்த்திகேயன் கூறுகையில்,

 போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி சிலம்ப மாணவர்கள் இருவரும் ஓடும் படகில் சுமார் இரண்டே கால் மணி நேரம் இரண்டு கைகளாலும் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் பரவி வரும் போதைப் பழக்கத்தை ஒழிப்பதற்காக இதுபோன்ற விளையாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய அவர்,விளையாட்டுத்துறையில் சிலம்பம் விளையாட்டு இன்று முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.