மாவட்டம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்...நடந்தது என்ன?

Malaimurasu Seithigal TV

மணப்பாறை அருகே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 15 மயில்கள்.எலிக்காக வைக்கப்பட்ட விசத்தை சாப்பிட்டதால் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புதுமணியாரம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 ஆண், 8 பெண் என மொத்தம் 15 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றிய தகவலின் பேரில் மணப்பாறை வனத்துறையினர் சென்று பார்த்த போது விஷம் சாப்பிட்டு மயில்கள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தோட்டத்தின் உரிமையாளர் யார் என்று வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை (வயது 80) என்பது தெரியவந்தது.

வயலில் உள்ள பயிர்களை எலி நாசம் செய்வதை தடுக்க அரிசியில் விஷம் கலந்து வைத்த நிலையில் அதை சாப்பிட்டு மயில்கள் இறந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் கால் நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்த பின் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவர் பிச்சையை கைது செய்தனர்.