மாவட்டம்

தரமற்ற அரிசி...! ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்...!!

Malaimurasu Seithigal TV

திருத்தணி அருகே நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பு சர்க்கரையில்  புழுப்பூச்சி இருப்பதாக பொதுமக்கள் கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், முருகம்பட்டு ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்படும் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதி மக்கள் நேற்று நியாய விலை கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை வாங்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகயவை தரமற்ற முறையில் இருந்துள்ளது. மேலும் அதில் பூச்சிகளும் வண்டுகளும் கிடந்துள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு திருத்தணி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இனிமேல் இதுபோன்ற தரமற்ற பொருட்கள் வழங்கப்படாது என உறுதியளித்தனர். 

இதனையடுத்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சற்று நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.