மாவட்டம்

பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்...! கோரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்...!

Malaimurasu Seithigal TV

திருநெல்வேலி மாநகரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படும் போதும் மாணவர்கள் அத்து மீறி ஆபத்தான முறையில் பேருந்துகளின்  படிக்கட்டுகளிலும் ஜன்னல்களிலும் தொங்கி கொண்டு செல்லும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்லப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. திருநெல்வேலி மாநகர் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வருகை தருகின்றனர். மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு சில ஊர்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் மாணவர்கள் தொங்கி கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆனால் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் போதும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.  

குறிப்பாக பாளையங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு செல்வதற்கு அதிகமான பேருந்துகள் செல்லும்போதும் ஒரு சில பேருந்துகளில் மட்டும் மாணவர்கள் ஏறி பேருந்துகளின் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்யும் இத்தகைய அவல நிலையை போக்க மாநகர போக்குவரத்து காவல்துறை, பேருந்து நிலையங்களில் உரிய கண்காணிப்பை மேற்கொள்வதுடன் பேருந்துகளில் ஓட்டுநர் நடத்துனர்கள் மூலம் உரிய கண்டிப்புடன் மாணவர்கள் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர், திருநெல்வேலி டவுனில் ஓடும் பேருந்தில் இருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர் கீழே விழுந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.