மாவட்டம்

ஜப்பானில் தமிழ் பாரம்பரிய விவசாயம்...! அசத்திய பிரபல நடிகை..!

Malaimurasu Seithigal TV

ஜப்பானில் பிரபல நடிகை ஒருவர், தமிழ் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து அந்த அரிசியை தமிழக கோவில்கள் மற்றும் தருமபுர ஆதீனத்திற்கு வழங்கினார்.

ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகை மியா சாகி மசூமி, நடிகையாக இருந்து புகழ் பெற்ற அவர், மனநிம்மதி இன்றி இருந்ததால், தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி கேள்விப்பட்டு அவர்கள் பற்றி அறிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஜப்பானில் உள்ள ஹராமுரா என்ற தனது சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்து, தமிழ்நாட்டில் இருப்பது போல் நடவு பாடல்களை பாடி, ரசாயன கலப்பில்லாமல் நெற்பயிர் செய்ததாகவும், அந்த பயிருக்கு முருகா என்று பெயரிட்டும் அறுவடை செய்துள்ளார். 

அறுவடை செய்த நெல்லை அரிசி ஆக்கி தமிழகத்திற்கு எடுத்து வந்து பல்வேறு ஆலயங்களுக்கும் அளித்து வருகிறார். அதன்படி நேற்று மயிலாடுதுறை வந்த ஜப்பான் நடிகை மற்றும் அவரது ஐந்து பேர் கொண்ட குழுவினர் மயூரா நகர் ஆலயத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சன்னதியில் ருத்ர யாகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர். 

பின்னர் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு நேரில் சென்று ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்று தனது வயலில் விளைந்த முருகா நெல்லின் அரிசியை காணிக்கையாக சமர்ப்பித்தார். ஜப்பானில் முருகன் ஆலயம் அமைக்க உள்ளதாகவும் அதற்கு ஆதீனம் வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆதீனம் சார்பில் ஜப்பான் நடிகைக்கு முருகன் சிலை மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.