மாவட்டம்

விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை...! வேடிக்கை பார்த்த வனத்துறையினர்...!!

Malaimurasu Seithigal TV

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்த ஒற்றை யானையை வனத்துறையினர் மிகவும் அலட்சியமாக வேடிக்கை பார்த்ததால் கிராம மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயக்கனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக  ஒற்றை தந்ததுடன் ஒற்றை காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அருணாசலம் கொட்டாய் என்ற பகுதியில்  விவசாய நிலத்திற்குள் புகுந்த அந்த யானை ஆறுமுகம் என்பவரின் நிலத்தில் இருந்த நெற்பயிர்கள் மற்றும் அன்பு என்பவரின் தோட்டத்தில் இருந்த மாஞ்செடிகளை சேதப்படுத்தியது.

இதனை கண்ட மக்கள் வனத்துறையினரை வரவழைத்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டாமல் மிகவும்  அலட்சியமாக வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர்  கிராம மக்களே களத்தில் இறங்கி  விடிய விடிய அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில்  ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒற்றை யானை பல ஆண்டுகளாக இப்பகுதியில் சுற்றி வருவதாகவும் தற்போது காலில் காயம் ஏற்பட்டுள்ள அந்த யானை அங்கிருந்து வேறு பகுதிக்கு செல்ல முடியாமலும், ஓட முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறினர். 

எனவே உடனடியாக கால்நடை மருத்துவ குழுவை வரவழைத்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென கிராம  மக்கள் வனத்துறை மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.