மாவட்டம்

மாணவன் மீது சரிந்து விழுந்த புதிய கேட்...! இடுப்பெலும்பு முறிவு...!

Malaimurasu Seithigal TV

தஞ்சையில் உள்ள அன்னை சத்யா ஸ்டேடியத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல்குளம், கால்பந்து மைதானம், ஓட்டப்பந்தயம் டிராக், இரவு நேரத்தை பகலாக்கும் வகையிலான மின்விளக்குகள், 50 அடி உயரத்தினால் ஆன நுழைவு வாயில் வளைவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் நுழைவு வாயிலுக்கு 15 அடி உயரத்தில் இரண்டு இரும்பு கேட்டுகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பொருத்தப்பட்டன. 

இந்த நிலையில் கராத்தே பெடரசன் கிளப் சார்பில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வந்தது. இந்த பயிற்சியில் தளியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீவர்சன் என்ற மாணவன் ஈடுபட்டு வந்தான். நேற்று இரவு பரிசுப்பொருட்களை எடுத்து கொண்டு ஸ்டேடியம் வந்த போது நுழைவு வாயில் இரும்பு கேட் மூடப்பட்டு இருந்ததால், கேட்டை ஸ்ரீவர்சன் தள்ளியபோது எதிர்பாரதவிதமாக கேட் சரிந்து மாணவன் மீது விழுந்தது. 

இதில் மாணவனின் இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. படுகாயத்துடன் கேட் அடியில் சிக்கி இருந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். எழுந்து நடக்க முடியாத நிலையில், இடுப்பு மற்றும் தொடை எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 

தரமற்ற முறையில் பொருத்தப்பட்ட கேட்டால், நடந்த இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவனின் அறுவை சிகிசசைக்கான செலவை அரசு ஏற்கவேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.