மாவட்டம்

தம்பதி சமேதராக தேர் ஊர்வலம் வந்த ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்...

தை மாதம் 7ம் நாளை முன்னிட்டு, ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை மாத பிரமோற்சவவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான இன்று வீரராகவப் பெருமாள் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது.

திருதேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில்  ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்  ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக   சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றினர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் நான்கு மாட  வீதிகளிலும் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.